சரத்வீரசேகரவை நோக்கி அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டு
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekera) மீது மூன்று அமைச்சர்கள் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அதாவது, அவரது அமைச்சின் கீழுள்ள காவல்துறையின் நடத்தை குறித்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தாம் செய்த முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், முறைப்பாட்டை பதிவு செய்த அதிகாரி உட்பட விசாரணைகளை மேற்கொண்டிருந்த மற்றுமொரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற ரீதியில் தம்மை இவ்வாறு நடத்தினால் சாதாரண மக்கள் காவல்துறையால் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியும் எனவும் அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage), கடந்த அரசாங்கத்தில் 20 திருடர்களுக்கு எதிராக தாம் முறைப்பாடு செய்த போதிலும் இன்று வரை காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனையடுத்து, கடந்த அரசாங்கத்தின் போது, முறைப்பாடுகள் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகவும், அந்த செயற்திறனுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது எனவும் நாமல் ராஜபக்சவும்(Namal Rajapaksa) குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் கேட்டறிந்த சரத் வீரசேகர, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.