யாழில் மூடப்படவுள்ள நலன்புரி நிலையம் : அரசாங்க அதிபர் அறிவிப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரேயொரு நலன்புரி நிலையமும் இம்மாத இறுதிக்குள் மூடப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் (M.Piratheepan) உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியத் (UK) தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாடி (Henry Donati), இன்று (11.12.2024) யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
வைத்திய உபகரணங்கள்
அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கோரிக்கையினை முன்வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வார காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போல் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின் அவசியம் பற்றி அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் இது வரை 50 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சமைத்த உணவு வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக 49 மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்1 மில்லியன் ரூபா உடனடி அனர்த்த தணிப்பு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எமது அரசாங்கத்திடம் மாவட்ட த்திற்கான தேவைப்பாடுகளை முன்வைத்த போது, நாம் கோரிய நிதி ஒதுக்கீட்டினை சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவாக விடுவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வீடமைப்புத் திட்டத்தின் தேவை
மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவு முறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட த்திற்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்கள் முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்கு காணி அரசாங்கத்தின் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களே தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இம் மாத இறுதிக்குள் அவ் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இதேவேளை இக் கலந்துரையாடலில் பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர் ப்ராக் வேர்தூஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |