படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் : சபையில் கொந்தளித்த சஜித்!
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (22.10.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது கடமையை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தில் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் உயிரிழந்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நளிந்த ஜயதிஸ்ஸ, இவ்விடயம் தெடர்பில் தற்போது காவல்துறை விசாரணைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தின நாடாளுமன்ற அமர்வின் போது காரணிகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இந்த விடயத்தால், சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
வெலிகம துப்பாக்கிச்சூடு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை பிரதேச சபைக்குள் அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவரான லசந்த விக்ரமசேகர மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
