வெலிக்கடை சிறைப் படுகொலை விவகாரம்! சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணையின் தீர்ப்புத் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
தனியொரு நபருக்கு எதிராக மாத்திரம் மரண தண்டனை விதிப்பது படுகொலைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்த விடயங்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை என ஐந்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தைப் பொறுத்தமட்டில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அது குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், சிறைச்சாலைகள் முன்னாள் அத்தியட்சகர் லமாஹேவகே எமில் ரஞ்சன் மாத்திரமே தண்டிக்கப்பட்டுள்ளதாக ஐந்து சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஒரேயொரு அதிகாரியை மாத்திரம் பொறுப்புக்கூறச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மரணதண்டனைக்கு எதிரான ஆசிய வலையமைப்பு, உச்சபட்ச தண்டனை குறித்த நீதிச்செயற்திட்டம், மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, மொனாஷ் பல்கலைக்கழகத்தின் எலியோஸ் நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய ஐந்து நிறுவனங்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்காவில் தற்போதும் மரணதண்டனை பயன்பாட்டில் இருப்பதைக் கடுமையாகக் கண்டனம் செய்துள்ள அவ்வமைப்புக்கள், மரணதண்டனையை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கையில், லமாஹேவகேவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையானது சிறைச்சாலை அதிகாரி ஒருவரை பொறுப்புக்கூற வைத்திருப்பதாகத் தோன்றுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதி கிடைக்கப் பொறுப்பானவர்களைக் பொறுப்புக்கூற வைப்பது ஒரு முக்கியமான படியாகும் எனவும், மரணதண்டனையின் ஊடாக இதனை அடைய முடியாது எனவும், மரண தண்டனை நீதியை வழங்குவதற்கு ஒருபோதும் பொருத்தமான வழி அல்லவெனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொலையின் ஒரு வடிவமான மரண தண்டனையைப் பயன்படுத்துவது, அரசு இயலுமைப்படுத்தப்பட்ட கொலைக்கு தண்டனை பெற்ற ஒருவருக்கு தண்டனையாக, தனிநபர்களின் உயிரைப் பறிக்க அரசு அதிகாரம் பெற்றதன் அபர்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக ஐந்து நிறுவனங்களின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த காவல்துறை போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ கடந்த 12ஆம் திகதி மேல் நீதிமன்றத்தினால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமாஹேவகே எமில் ரஞ்சன் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில் அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.