இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல - கஜேந்திரன் காட்டமான பதில்
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடல்ல வட கிழக்கு தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த இடம்.
ஆனால் சில இனவாதிகள் இதனை ஓர் சிங்கள பௌத்த நாடாக சித்தரிக்க முற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(08) யாழ் கொக்குவில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் குருந்தூர் மலை விவகாரம் குறித்து அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ள கருத்து மற்றும் முல்லைத்தீவு மனித புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சரத் வீரசேகர முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பாகவும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜா தொடர்பாகவும் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னணி
இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குருந்தூர் மலைக்கு விஜயம் மேற்கொண்ட போது, நீதிமன்ற செயற்பாடுகளை அவமதிக்கும் வகையில் அங்கு பிக்குகள் பூஜை வழிப்பாடுகளில் ஈடுப்பட்டு வந்தனர்.
இதன்போது, நீதிபதி காவல்துறை ஊடாக பணிவான முறையில், விசாரணைகள் மேற்கொள்ளும் போது அவ்வாறு வழிபாடுகளை மேற்கொள்வது முறை கிடையாது என அறிவுறுத்தல் விடுத்தாரே அன்றி அங்கிருந்து பிக்குகளை வெளியேற கோரவில்லை.
வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிக்குகள் விசமத்தனமான முறையிலும், தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தை தூண்டும் வகையிலேயே செயற்பட்டனர்.
விசாரணைகள் நிறைவு தருவாயை எட்டும் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவ்விடத்திற்கு வந்து நீதிபதியிடம் அறிமுகப்படுத்த முற்படும் போது, அவர் நாகரீகமான முறையில் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கினால் இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சரத் வீரசேகர தென்னிலங்கை மக்களை ஆத்திரப்படுத்தும் விதமாக, அப்பட்டமான பொய்யை கூறி தன்னை வெளியேறுமாறு கட்டளையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் வீரசேகர போன்ற இனவாதிகளுடைய இட்டுக் கட்டுகின்ற கருத்துருவாக்கங்கள் காரணமாகத்தான் இத்தீவில் இன்றுவரை இன நல்லிணக்கம் ஏற்பட முடியாமல் இருக்கின்றது, அத்துடன் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
தமிழ் நீதிபதிக்கு அதிகாரம் இல்லை
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என முல்லைத்தீவு நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
குரூந்தூர் மலை தொல்பொருள் மரபுரிமை தொடர்பாக கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது.
சிங்களவர்கள் சார்பாக தீர்ப்புச் சொன்னால் அந்நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இதுவே தமிழர்கள் சார்பாக தீர்ப்பு வழங்கினால் அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுவது தேசிய இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றது” என்றார்.