வடக்கு வைத்தியசாலைகளில் தொடர் மருத்துவ கொலைகள் : சுகாதார அமைச்சை நோக்கி அர்ச்சுனா சரமாரி கேள்வி
வடக்கு வைத்தியசாலைகளில் தொடர்ந்து இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் இதுவரையும் சுகாதார அமைச்சு (Ministry of Health) எந்தவித முறையான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archuna Ramanathan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் (Mannar) வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா தொடர்பில் கேள்வியெழுப்பியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், சம்மந்தப்பட்ட அதிகரிகளையோ அல்லது வைத்தியர் மற்றும் தாதியர்களையோ அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஒரு கேள்விக்கும் உட்படுத்தவில்லை.
இன்று வரையும் அது குறித்து எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை தற்போது அந்த குழந்தை தாயும் தந்தையும் இல்லாமல் நிற்கின்றது.
அதேபோலத்தான், கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலையும் ஒரு சிசு உயிரிழந்தது, ஆனால் அது தொடர்பிலும் சுகாதார அமைச்சு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுகாதார அமைச்சருக்கு நான்றாக தெரியும் யாழ் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital) என்பது வடக்குக்கு மட்டும் அல்ல தெற்கிற்குமே ஒரு பிரதான வைத்தியசாலை.
இது தொடர்பில் நான் ஜனாதிபதி வரை எனது கருத்தை நான் கொண்டு சென்றிருக்கின்றேன், எனது தந்தை முதல் இன்று வரை எமது எத்தனையோ மக்கள் வைத்தியசாலைகளில் இருந்து காணாமலாக்கப்பட்டு வந்துள்ளனர்.
எப்போதும், இது தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, முள்ளிவாய்க்காலில் படுகொலை நடக்கவில்லை என தெரிவித்தவர்களை பார்த்து கேட்கின்றேன், தற்போது அதே நிலை வைத்தியசாலைகளில் தொடர்வது உங்களுக்கு தெரியவில்லையா ?
கேட்டாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதில் யாழ் தமிழனாக எனக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.
தற்போதும் கூட யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இருந்த ஒரு சிங்கள தாதியர் அவசரமாக தெற்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நான் கேள்வி எழுப்பினால் நான் இனம் மற்றும் மதம் என கதைப்பதாக தெரிவிக்கின்றனர்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)