பித்ருக்களின் ‘ஆடி அமாவாசை’ விரதத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது!
பன்னிரு மாதங்களில் அமாவாசை வருகின்றன. ஆனால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்த புனித நாளாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ‘ஆடி அமாவாசை’ என்ற சிறப்பு பெயரையும் இது பெற்றுள்ளது.
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை ஆடி மாதம் 23 ஆம் திகதி (ஆகஸ்ட் 8 ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களை ‘பிதிர்களை’ இந்த ஆடி அமாவாசை தினத்தில் நாம் வரவேற்கும் நாளாகும்.
இறந்த முன்னோர்களுக்கு மாதம் தோறும் வரும் அமாவாசையில் விரதமிருந்து தர்ப்பணம் செய்யாதவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் கண்டிப்பாக விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்விரதம் தந்தையை இழந்தவர்கள் கடைபிடிக்கும் விரதமாகும்.
முன்னோர்களை நினைத்து இருக்கும் விரதம் ஆகும். பிதிர்களை வரவேற்பது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோமோ அதுபோல நம் முன்னோர்களும் இந்நாள் தன் உறவினர்களைத் தேடி வருவதாக ஐதீகம்.
அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்து வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்து வழிபடுதல் வேண்டும். தர்ப்பணம் செய்தல் தர்ப்பணம் செய்தல் அமாவாசை நாளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில் ஆண்கள் நீராடி ஆலயங்களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் ஊற்றி வழிபடுவது தர்ப்பணம் என்று சொல்வர்.
இது முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடாகும் இப்படி செய்யும்போது முன்னோர்களின் ஆத்மா மிகவும் சந்தோஷமடைகின்றது. பின்னர் அந்தணரும் தானம் கொடுத்து வழிபடவேண்டும். வீட்டிற்கு வந்து முன்னோர்களை நினைத்து அவர்கள் விரும்பிய சைவ உணவுகளை படைத்து வழிபட வேண்டும்.
பின்னர் மற்றவர்களுக்கும் உணவு கொடுத்த பின் தாமும் உணவு அருந்த வேண்டும். ஏழைகளுக்கு தானம் கொடுப்பது இன்னும் விசேடமாகும். முன்னோர்கள் தான் நமது பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள். அவர்களை மகிழ்விப்பதன் மூலம் எமது சந்ததியும் மகிழ்ச்சியடையும்.
அவர்களின் ஆசியும் எங்களுக்கு கிடைக்கும். இந்நாளில் பசுக்களுக்கு பழம், அகத்திக் கீரை போன்றவற்றையும் கொடுக்கலாம்.
இவ்விதம் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாவிட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று சாஸ்திரங்கள் புராணங்கள் கூறுகின்றன.
பிதிர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்யத் தவறினால் பிதிர் தோஷம் அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படும்.
பிதிர்கடன் செய்யாவிடில் ஏற்படும் பாதிப்புகள்
சந்ததி சிறக்க இப் புண்ணியமான கடனை செய்யாவிட்டால் பல இன்னல்களுக்கு ஆளாவர்.
குழந்தையின்மை, குடும்பத் தகராறு, ஆரோக்கிய குறைபாடு, ஊனமுள்ள குழந்தைகள், நோய் பாதிப்புகள், மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை வாழ்வில் எதிர்கொள்வர் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
நன்மைகள்
ஆடி அமாவாசை நாளில் இறந்தவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களை நினைத்து செய்யும் காரியங்களும் முன்னோர்களின் மகிழ்ச்சியும் நற்பலன்களும் அதிகரிக்கும்.
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும், சுபகாரியங்கள் நடைபெறும், தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும்.