229 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ள அரசாங்கம் : ஐக்கிய மக்கள் சக்தி
அரசாங்கம் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்னர் 229 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கத்திற்கு எங்கிருந்து வருமானம் கிடைத்தது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கான தொகையை செலவிட அரசாங்கத்திடம் நிதியில்லை எனவும் அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S. M. Marikkar) குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் முடிவடைவதற்குள் 229 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குகின்றனர்.
பொருளாதார கஷ்டம், பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு என்பன ஏற்பட்டுள்ள நேரத்தில் இப்படியான நிவாரணத்தை வழங்குவது சிறந்தது என சிலர் கூறலாம்.
மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக வருமானம் எங்கிருந்து கிடைக்க போகிறது என செய்தியாளர்கள் நிதியமைச்சரிடம் கேட்ட போது, அவரால் அதனை கூற முடியவில்லை.
வருமானம் இன்றி நிவாரணத்தை வழங்குவது என்பது மத்திய வங்கி பணத்தை அச்சிட்டே நிவாரணத்தை வழங்குகிறது என்றே அர்த்தம். மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு, நிவாரணத்தை வழங்குவது நியாயமானதா?
வருமானமின்றி பணத்தை அச்சிட்டு நிவாரணம் வழங்கினால், பணவீக்கம் அதிகரிக்கும். பண வீக்கம் அதிகரித்தால், பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
பொருட்களின் விலைகள் அதிகரித்தால், இந்த 5 ஆயிரம் ரூபாய் போதுமா என்ற கேள்வி எழும். இப்படியான சூழ்நிலையில், ரூபாய் மதிப்பிழந்து, எதிர்காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் போன்று பணத்தை வீல்பரோ வண்டிகளிலேயே கொண்டு செல்ல நேரிடும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.