ஏழு மூளைகளைக் கொண்டவர் எங்கே?? - போராட்டத்தை ஆரம்பித்த எதிர்க்கட்சி
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது.
இன்று கிராமம் கிராமமாக, வீடு வீடாக இல்லை என்ற வார்த்தையே மற்றும் பொருளாதார நெருக்கடியின் வேதனையிலும் மக்கள் உள்ளனர்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற "விருப்பப்படி ஆட்சியாளர்கள் - பட்டினியில் மக்கள்" என்னும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எந்தவிதக் கவனத்தையும் செலுத்தவில்லை. நாட்டில் நண்பர்கள் கும்பல் மற்றும் பாரிய அளவிலான மாபியாக்கள் செயற்படுகின்றது.
அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கிக் கொண்டே செல்லுகின்றது. சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
மாறாக, இன்று நடப்பது மக்களுக்கு அசௌகரியத்தையும் வறுமையால் வாட்டுவதையுமே அரசாங்கம் செய்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








