உணவா தேர்தலா என கேட்கும் அரசாங்கம்!
இலங்கையில் அடுத்த ஆண்டு நடத்தப்பட வேண்டியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பாக டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்த கருத்துக்கு குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பதில் வழங்கிய போதே பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் - சுதந்திர மக்கள் காங்கிரஸ்
அடுத்த ஆண்டு நடத்தப்படவுள்ள அதிபர் தேர்தலை நடத்துவதானது பொருத்தமற்ற ஒன்றெனவும் அதனை நடத்துவது சிறந்தது அல்லவெனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
பொருளாதாரம் நிலை
நாட்டின் பொருளாதாரம் நிலையான நிலையை அடையும் வரை அதிபர் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் பிற்போட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய அதிபர் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால், எரிவாயு, உணவு, மின்சாரம், மருத்துகள், மக்களுக்கு தேவையான எரிபொருள் என எந்த ஒன்றுக்கும் நிதி ஒதுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் புதுமையான கருத்து இது. இந்த கருத்தின் பிரகாரம் இரண்டில் ஒன்றை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்திற்கு 2 ஆயிரம் வருட வரலாறு உள்ளது.
இந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் எந்தவொரு நாட்டிலும் யுகத்திலும் எந்தவொரு கலாசாரத்திலும் எந்தவொருவரும் யாரும் கூறாத கதையையே வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் கட்டாயமாக அதிபர் தேர்தலைநடத்த வேண்டும் என்பதே சட்டமாகும்.நவம்பர் மாதம் புதிய அதிபர் பதவியேற்று, கடமைகளை ஆரம்பிக்க வேண்டும்.
எவ்வாறான அதிகாரங்கள்
அது நடைபெறாவிடின் அதன் பின்னர் தொடரும் அதிபர் , சட்டவிரோத அதிபராவார். அரசியலமைப்புக்கு எதிரான அதிபராவார். அரசியலமைப்பின் கீழ் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அதிகாரத்தையும் அவரால் பயன்படுத்த முடியாது.
நாட்டின் பாதுகாப்பை வழங்க முடியாது.முப்படைத் தளபதிகளுக்கு எந்தவொரு உத்தரவையும் வழங்க முடியாது.அவ்வாறு உத்தரவு வழங்கப்படுமாயின், அது சட்டவிரோதமான உத்தரவுகளாகவே அமையும்.
எந்தவொரு அதிகாரமும் இல்லாத ஒருவர் வழங்கும் கட்டளைகளை பின்பற்ற வெண்டிய அவசியம் முப்படைகளுக்கு இல்லை.
அதிபரின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் அவ்வாறான உத்தரவுகளை வழங்க முடியாது.அதன் பின்னர் இருப்பார் ஆயின், அது பலாத்காரமான ஒன்று.சர்வதேச நீதிமன்றங்களிலும் இது தொடர்பான தீர்ப்புகள் உள்ளன.