சிவலிங்கத்தை சுற்றிய வெள்ளை நாகம் : யாழில் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெள்ளை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த 10 ம் திகதியன்று விடுவிக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே வெள்ளை நாகம் சிவலிங்கத்தை சுற்றி இருக்கும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது.
பௌர்ணமி தினங்களில் பாம்பு
குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார், சிவலிங்க உருவச் சிலைகளும் லக்சுமி உருவப்படமும் வைத்து காணப்படுகிறது.
பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி குறித்த ஆலயத்திற்கு வருவதாகவும் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே குறித்த காணொளி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கவனமாக பராமரிக்க வேண்டும்
கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்க வேண்டும் என கோரி காணொளியை வெளியிட்டுள்ளனர்.
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் அபூர்வமானதாக கருதப்படும் வெள்ளைநாகம் சிவலிங்கத்தை தரிசிக்க வருவதாக கூறப்படும் சம்பவம் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |