வெள்ளைவானுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு : முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல்
வெள்ளைவான் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது புலனாய்வுப் பிரிவு தான் என சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்து மாட்டு வண்டியில் அழைத்துசெல்ல முடியாது அல்லவா? அதற்காகத்தான் வெள்ளைவான் பயன்படுத்தப்பட்டது என காலம் கடந்த பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது,
“சுமித் என்பவரை தெரியுமா என கருணாவிடம் கேளுங்கள், அந்த சுமித்தும் நான் தான், கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை, பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மரண பயத்தால் அவர் செல்லவில்லை, இதனையடுத்து இவர்களை கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டம்மானால் குழுவொன்று அனுப்பட்டது.
இந்தியாவில் இருந்து தப்பிவந்த
ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபராக பெயரிடப்பட்ட இந்தியாவில் இருந்து தப்பிவந்த ஒரேயொரு விடுதலைப்புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்த குழு அனுப்பட்டிருந்தது.
இது கருணாவுக்கு தெரியவந்தது, இறுதியில் 20 பேரை கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார்.
மேலும், வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன், ஏனெனில் போரை முடிவுக்குகொண்டுவர 70 சதவீத பங்களிப்பை அவர்கள்தான் வழங்கினார்கள்.
இதற்காக அம்மக்களுக்கு இதுவரை எவரும் நன்றி கூறியதில்லை, இன்றளவிலும் தகவல் வழங்குநர்களாகவே அவர்கள் எம்முடன் செயற்படுகின்றனர்.
புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது, அந்த குழுதான் கொலைக்கும்பல், 2009 இற்கு பிறகே அது உருவாக்கப்பட்டது, அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது.
வெள்ளைவான் கலாசாரத்தை
பிள்ளையான் என்பவர் தான் எனக்கு தகவல் வழங்குபவர், அதற்காகவே நான் அவரை பயன்படுத்தினேன்.
வெள்ளைவான் கலாசாரத்தை புலனாய்வுப் பிரிவுதான் அறிமுகப்படுத்தியது.
இதுகூட ஒருவகையான புலனாய்வு நடவடிக்கைதான், விடுதலைப்புலிகளை கடத்துவதற்காக அல்ல, கைது செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டது.
நான் பொன்சேகாவினதோ அல்லது எந்தவொரு அரசியல்வாதியினதும் கைக்கூலியாக செயற்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்