வெள்ளை வான் கடத்தல்: கோட்டாபயவால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய ஊடகவியலாளர் தொடர்பில் நீதிமன்றில் கேள்வி
2026 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு இடையிலான நிகழ்நிலை சாட்சிய விசாரணையின் போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட ஒரு கருத்தினால், பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு இருண்ட அத்தியாயம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த அவர், “தனக்கு ஊடக சுதந்திரச் செயற்பாட்டாளரை போத்தல ஜயந்தவை நினைவில் இல்லை, அவரைத் தெரியாது. 2009 ஆம் ஆண்டு சம்பவங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தவை என்பதால் நினைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.
முன்னாள் ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவைத் தெரியும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவர்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு வந்தது தனக்கு நினைவில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை
நீதி நிலைநாட்டப்படாத முறைப்பாட்டுக் கோப்புகளுக்கு மத்தியில் பல ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னணியில், 2009 ஆம் ஆண்டு சம்பவங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு நடந்தவை எனக் கூறி நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்படும் மறதிகளுக்கும், இன்னும் ஆறாத ஒரு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைத் தழும்புகளுக்கும் இடையிலான இடைவெளி இன்றும் அப்படியே நீடிக்கிறது.
இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில்,
2009 ஜூன் 1 ஆம் திகதி மாலை வெள்ளை வான் ஒன்றினுள் சித்திரவதை செய்யப்பட்டதன் தழும்புகளையும், இடது காலில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட உலோகத் தகட்டையும் இன்றும் சுமந்து கொண்டிருக்கும் போத்தல ஜயந்தவிற்கு, அந்த நாள் ஒருபோதும் நினைவிலிருந்து நீங்கியிருக்க வாய்ப்பில்லை.
வெளியான தகவல்களின்படி, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்காக முன்னாள் லேக்ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமாரவுடன் பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்ற போத்தல ஜயந்த, அங்கு கோட்டாபயவின் முகத்திற்கு நேராக விமர்சனங்களை முன்வைத்த சில மணி நேரங்களிலேயே பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான வெள்ளை வான் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் இச்சம்பவம், 2008 மே மாதம் கீத் நொயார் கடத்தப்பட்டமை மற்றும் 2009 ஜனவரி மாதம் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் தொடரின் ஒரு பகுதியாகும்.
மூடப்பட்ட வழக்கு
2008 மே மாதம் கீத் நொயார் கடத்தப்பட்டமைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, சனத் பாலசூரிய மற்றும் போத்தல ஜயந்த ஆகியோரை அழைத்து அச்சுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
2009 ஜூன் 1 ஆம் திகதி பிற்பகல் 4.15 மணியளவில் ஜயந்த தனது மனைவி கல்யாணியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
வழக்கமாக வீடொன்றிற்குச் செல்லும் வழியில் நுகேகொடை எம்புல்தெனிய சந்திக்கு அருகிலுள்ள மருந்தகம் ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, பிற்பகல் 4.30 மணியளவில் அந்த கடத்தலுக்கு அவர் முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக ஜயந்தவை ஐ.டி.எச் (IDH) வைத்தியசாலைக்கு அருகிலுள்ள சேற்றுக் குழி அடையாளம் தெரியாத கடத்தல்காரர்கள் ஒன்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மத்தியில் உயிர் பாதுகாப்பைத் தேடி போத்தல ஜயந்த 2009 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
2017 ஜூன் மாதம் மீண்டும் இலங்கைக்கு வந்த அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்து கோட்டாபய ராஜபக்ச நிர்வாகமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று தெரிவித்தார். எனினும், அந்த விசாரணையும் எவ்விதப் பலனுமின்றி நிறுத்தப்பட்டது.
அவரது கடத்தல் தொடர்பிலான வழக்கு 2010 ஆம் ஆண்டு மூடப்பட்டதாகத் தகவல்கள் உள்ள நிலையில், தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வெள்ளை வான் ஒன்றைக் காணும் ஒவ்வொரு முறையும் தனக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், தன்னைக் கொன்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்த சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் ஜயந்த கூறியுள்ளார் எ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |