பண்டிகை கால கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதிகரிக்கும் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக இருப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர (Ajith Gunasekara),
சந்தையில் மேலதிக இருப்பு காணப்படுவதால் கோழி இறைச்சியின் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தி போதுமானதாக இருப்பதுடன் சந்தைக்குத் தேவையான மேலதிக அளவையும் வழங்கும் திறன் இத்துறைக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் பண்டிகைக் காலம் காரணமாகக் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்றாலும் அதனைச் சமாளிக்கப் போதுமான பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பு உள்ளதால் பெரிய விலை உயர்வு எதிர்பார்க்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வைரஸ் நோய்கள்
உற்பத்திக் குறைவு மற்றும் அதிகரித்து வரும் தேவை ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
விலங்குத் தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதற்கு மாற்றாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதனால் முட்டை உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கோழிப் பண்ணைகளில் பல வைரஸ் நோய்கள் பரவியமையும் முட்டை உற்பத்தி குறைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு முட்டை 39 ரூபா முதல் 40 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர் குறுகிய காலத்தில் முட்டை உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்கால முட்டை விலை மாற்றங்களை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றும் அவை சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலாலேயே தீர்மானிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |