தமிழ் பொது வேட்பாளர் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்: வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டு
தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவேந்தலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, யார் தமிழ் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை என்றும் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்.
உரிமை சார்ந்த தீர்வு
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “கடந்த வாரம் வவுனியாவில் சிவில் அமைப்புகள் மதத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கலந்துரையாடி பொது வேட்பாளர் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணிப்பதுடன் தமிழர்களுடைய அபிலாசைகளை உலகுக்கு வெளிக்காட்டும் விதத்திலும் தமிழர் வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையிலும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வை வழங்காது என்பதே கடந்த கால வரலாறு” எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |