காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார்: சிவாஜிலிங்கம் விடுத்துள்ள சவால்
காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரன்நேசன் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு இருக்கிறார்.
மனித சங்கிலி போராட்டம்
இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்ச்சியாக நாங்கள் எட்டு கட்சிகள் சேர்ந்து ஒரு பொது வேலை நிறுத்தம் ஹர்த்தாலையும் செய்திருந்தோம்.
அதிலே அவர் குறிப்பிடுகின்ற போது மனித சங்கிலி போராட்டம் தோல்வியிலே நிறைவடைந்து இருக்கின்றது, தலைவர்கள் வேட்டி கசங்காமல் போராடுகின்றார்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கூறியிருக்கிறார், நான் கேட்க விரும்புகின்றேன் இவ்வாறு கூறியவர் ஹர்த்தாளைப் பற்றி மூச்சு விடவில்லை, அதிலிருந்து இது வெற்றி பெற்று இருக்கின்றது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை மனித சங்கிலி போராட்டம் பெறவில்லை என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தோம்.
ஆனால் இவர் கூறுவது போன்று பிசுபிசுத்து விட்டது, போன்ற காரியங்களை கூறியது மாத்திரமல்ல இன்னுமொரு உண்ணாவிரதத்தை பற்றி குறிப்பிட்டு அதிலே ஒரு கட்சித் தலைவர் உண்ணாவிரதத்தில் காலையில் இருந்தார் மதியம் 11 மணிக்கு மீன் சந்தையிலே நின்றார் தொடர்ந்து மாலையில் உண்ணாவிரதம் முடிக்கும் போது இருந்தார் என்று எல்லாம் கூறி இருந்தார்.
தியாக தீபம் திலீபனுடைய நினைவஞ்சலி
நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் அப்படி என்றால் இவரும் அந்த மீன் சந்தைக்கு போய் இருக்கின்றார் என்று தானே அர்த்தம், யார் அந்த தலைவர் என்று பகிரங்கமாக சொல்லட்டும் அதை விடுத்து விடுகதை சொல்லுவது போன்று சொல்லுவதில் அர்த்தமில்லை, இவ்வாறு சொல்பவர் தான் பெரிய வீராதி வீரன் என்று யாராவது நினைத்தால் அஞ்சி அஞ்சி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கேட்பார்.
குறிப்பாக ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தியாக தீபம் திலீபனுடைய நினைவஞ்சலி ஆரம்பமாகி அன்று, அந்த நினைவஞ்சலிக்கு தடை விதிக்கக் கூடாது என்று நாங்கள் ஒன்பது கட்சிகளாக கூடிய போது ஐங்கர்நேசனுடைய கட்சியை கூட அழைத்து அதிபருக்கு கடிதங்கள் எல்லாம் எழுதிய சூழ்நிலையில், தடை வந்தபோது அந்த தடையை மீறி அஞ்சலி செலுத்தினேன் என்பதற்காக 15 ஆம் திகதி காலையில் கோண்டாவிலில் வைத்து கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்கள் அதாவது அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளியில் வந்தேன்.
பயங்கரவாத தடைச் சட்டம்
அது இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் என் மீது தண்டனைக்குரிய குற்றம் என்று, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், அதேபோல் 2011 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட விசேட ஒழுங்கு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு நான் விசாரணை எதிர்நோக்கி இருக்கின்றேன்.
இந்த சூழ்நிலையில் தான் நாங்கள் பலரும் ஒன்று கூடி செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினம் அன்று நாங்கள் ஒரு உண்ணாவிரதத்தை, சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதிக்காததை கருத்தில் கொண்டு சாவகச்சேரியில் நடத்துவதற்கு காலையில் தீர்மானித்து வேகமாக முன்னெடுத்துக் கொண்டு சென்ற போது நீங்கள் சாவகச்சேரிக்கு வாருங்கள் என்று நான் தகவல் தெரிவித்த போது தான் அண்ணே காவல்துறையினர் பிடிப்பார்களா என்று கூறிவிட்டு அவர் அன்றைய உண்ணாவிரதத்துக்கு வரவில்லை, இவ்வாறு நடந்து கொள்பவர் மற்றதை பற்றி போராட்டத்தில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்கள் சறுக்கல்களை பற்றி இவர் பேசக்கூடாது, ஆகவே இவர்கள் ஏதோ பசுமை என்று வைத்துக்கொண்டு கட்சி என்று வைத்துக்கொண்டு செல்லுகின்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் பாத்தரவாளிகளாக ஆக முடியாது.
இவ்வாறு பிரச்சனை வரும் என்று அஞ்சி கொண்டிருக்கக் கூடியவர் இன்றைக்கு மனிதச் சங்கிலியிலே, நீங்கள் கலந்து கொள்கின்ற ஒரு சில போராட்டங்களிலே பேருந்தில் ஏற்றி வருகிற ஐம்பது, 100 பேருடன் நடைபெறுகின்ற போராட்டம் அல்ல ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பல இடங்களிலே கூடி நின்று தான் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார்கள்.
அது மாத்திரமல்ல அவர்கள் தங்களுடைய தலைமைச் செயலகம் அமைந்திருக்கின்ற கொக்கில் பகுதியில் அவர் திரண்டு சங்கிலியாக நின்றிருந்தார்கள்.
ஆகவே ஐங்கரன்நேசன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அவரை கலந்து கொள்ளுமாறு கேட்டபோது கூட விக்னேஸ்வரன் ஐயாவினுடைய வீட்டில் கூட்டம் நடைபெறுகின்ற போது கலந்து கொள்ள முடியாது என்று கூறி இருந்தார், ஆகவே உங்களை நாங்கள் அழைக்காமலும் விடவில்லை நாங்கள் ஒரு மரியாதை கொடுத்து எல்லோரையும் அழைத்தோம்.
நீதிபதி சரவணராஜா
இந்த சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்தமாகத்தான் ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்று இந்த எதிர்ப்புகளை அது முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா சம்பந்தமாக இருக்கலாம், அல்லது கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளை கண்டித்து என்று முதலாவது மனித சங்கிலி நடைபெற்றது.
முதலாவது மனித சங்கிலி ஆனது சரவணராஜாவுக்காக நடத்தப்பட்ட மனித சங்கிலி அந்த மனித சங்கிலியிலே முல்லைதீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்தும் சட்டத்தரணிகள் பெருமளவில் நின்றதை இவர் பார்க்கவில்லையா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |