மகிந்தவின் அதிகாரத்தை ஏன் பறித்தார் கோட்டாபய?
மகிந்தவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக காணப்பட்டது என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையெனில் 20வது திருத்தத்தின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி ஏன் பறித்தார் என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி,ஜனாதிபதியின் உரை குறித்து கேள்வி எழுப்பி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தனது பொருளாதார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக பி பி ஜயசுந்தரவை நியமித்துள்ளது. அப்படியென்றால் ஜனாதிபதிக்கு பிரதமர் மீதும் தனது அமைச்சரவை மீதும் நம்பிக்கை இல்லையா என ஐக்கியதேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி தனது உரையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கவில்லை. ஜனாதிபதி தனது உரையை பொதுமக்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவும்,தனது அரசாங்கம் ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான சாக்குப்போக்குகளை முன்வைப்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். ஜனாதிபதி தனது உரையில் அவற்றுக்கான தீர்வினை முன்வைக்கவில்லை.
மாறாக ஏன் தன்னால் தீர்வுகளை முன்வைக்க முடியவில்லை என்பதற்கான சாக்குப்போக்குகளை மாத்திரம் முன்வைத்தார் என ஐக்கியதேசிய கட்சி மேலும் தெரிவித்துள்ளது.