யாழ். அரியாலையில் அரங்கேறிய கொடூரம் - கணவனைக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணத்தில் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இந்த கொடூர கொலை சம்பவத்தில் 32 வயதுடைய செல்வகுமார் என்பவரே உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (25) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தலையில் அடிக்கப்பட்டுப் கொலை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய செல்வகுமார் என்பவர் தேங்காய்த் துருவியால் தலையில் அடிக்கப்பட்டுப் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன், எதிராளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |