வடக்கு கிழக்கை பிரித்தமைக்காக ஜேவிபி இனியேனும் மன்னிப்புக் கோருமா....
ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்காவின் இந்தியப் பயணம் இலங்கையின் அரசியலில் பெரும் அதிர்வுகளையும் உரையாடல்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்தியா மீது தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த ஜேவிபி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து யுத்தம் முடிவுக்கு வந்த காலம் வரையிலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் அவலங்களுக்கு சிறிலங்காவை ஆட்சி புரிந்த பிரதான கட்சிகளுடன் ஜேவிபியும் பெரும் பொறுப்பை வகிக்கின்றது. இந்த நிலையில் ஜேவிபியினரின் அண்மைய இந்தியப் பயணம் என்பது அவர்களின் கடந்த கால தீர்மானங்களைக் குறித்தும் கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.
அனுர தலைமையில் இந்தியப் பயணம்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கடந்த சில நாட்களின் முன்னர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ளனர்.
இப் பயணத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மற்றும் பாதுகாப்பு அஜித் தோவலையும் சந்தித்துள்ளார். சர்தார் படேல் பவனில் நடந்த இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக இந்திய ஊடங்கள் கூறுகின்றன.
இதேவேளை இப் பயணத்தின்போது இன்னும் பல முக்கிய பிரமுகர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர உள்ளிட்ட தரப்பினர் சந்திப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
அத்துடன் இந்தியாவின் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலையும் அனுரா சந்தித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தின் நிர்வாக செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் புலிகளின் வீரம் செறிந்த குடாரப்பு தரையிறக்கம் பற்றிய நாவல்
பின்னணியில் ரணில்..
இலங்கை அரசுக்கு கடுமையான எதிர்ப்புக்களை முன்வைத்து வந்த மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் துணை நின்றிருந்தது. என்றபோதும்கூட தொடர்ந்து அரசாங்கம் மீது ஜேவிபி விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கிறது. அத்துடன் இந்தியா மீதும் தொடர்ந்து கடும் விமர்சனங்களை ஜேவிபி முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியை இந்தியா அழைத்திருப்பதும், மக்கள் விடுதலை முன்னணி அதற்கு இணங்கி இந்தியா சென்றிருப்பதும் பலருக்கும் அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார். அதன் காரணமாகவே அனுர குமார திஸாநாயக்க இந்தியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளாரென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
அதேபோல, அனுர குமார திஸாநாயக்க உட்பட அவரது குழுவினர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்றும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்திய எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டு நடைமுறைக்கு ஏற்றால் போல் செயற்பட முனைவது வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றம் மகிழ்வுக்குரியது என்றும் கூறியுள்ளமையின் வாயிலாக இந்த சந்திப்பின் பின்னணியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இருப்பது தெளிவாகியுள்ளது.
நாமல் மகிழ்ச்சி
இதேவேளை சீனாவை ஒரு பக்கமாகவும் இந்தியாவை இன்னொரு பக்கமாகவும் வளைத்து வைத்து கடந்த காலத்தில் அரசியல் செய்து வந்த ராஜபக்சவினரின் வாரிசமான நாமல் ராஜபக்ச, அனுரவின் இந்தியப் பயணம் குறித்து பெரும் மகிழச்சியை வெளியிட்டுள்ளார்.
ஜே.வி.பி. பல ஆண்டுகளாக இந்தியாவை விமர்சித்து வந்ததால் பல இந்திய முதலீடுகள் கைவிடப்பட்டன. தற்போது ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணம் என்றும் இருப்பினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு நிலைப்பாட்டை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளமை ஒரு நல்ல விடயம் என்றும் நாமல் கூறியுள்ளார்.
அனுரவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு வரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜேவிபி ஆதரவளிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர் என்றும் இது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இது ரணில் விக்ரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம் என்றும் கூறியுள்ளதுடன், அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசை விமர்சித்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்களில் மனதில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தாங்கள் வரவேற்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பலருக்குப் பொறுக்கவில்லையாம்
இதேவேளை அனுர குமார திஸாநாயக்கா உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பயணம் பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்பை மக்கள் விடுதலை முன்னணி பெரும் கௌரவமாக கருதுவதாகவும் ஊடகங்கள் சித்திரிக்கின்றன. இந்த நிலையில், அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் பல வகையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
பொறாமை காரணமாகவே இவ்வாறு தெரிவிக்கின்றனர் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசியலில் இவ்வாறு ஜேவிபியின் இந்திய உறவு குறித்த அரசியல் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் தமிழர் தாயகத்திலும் இந்தப் பயணம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த காலத்தில் ஜேவிபி இந்தியாவின் முன் வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டது.
இக் கட்சியே நீதிமன்றில் வழக்கு தொடுத்து வடக்கு கிழக்கு நிர்வாகத்தை இரண்டாகப் பிரித்தது. தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மாத்திரமின்றி இந்திய தலையீட்டுக்கு எதிராகவுவே இந்த முடிவை ஜேவிபி எடுத்தது.
13ஆவது திருத்தச்சடடம் தமிழர்களின் பிரச்சினைக்கு போதுமான தீர்வல்ல என்ற போதும்கூட இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை பிரிப்பதில் ஜேவிபி கொண்டிருந்த அதீத தலையீடு ஈழத் தமிழருக்கு ஆபத்தானதொரு சிந்தனை என்பதே இங்கு கவனிக்க வேண்டியது.
எனவே இப்போது இந்திய அரசுடன் உறவை ஏற்படுத்தியுள்ள ஜேவிபி கடந்த காலத்தில் எடுத்த இந்த முடிவுக்காக ஈழத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அத்துடன் 13ஐ தாண்டி தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் சிந்திக்க ஜேவிபி முன்வரவேண்டும்.
கடந்த காலத்தில் இனப்படுகொலைகளுக்கும் போர் துயரங்களுக்கும் காரணமாக இருந்த தரப்பு என்ற வகையில் ஜேவிபியினர், இனிவரும் காலத்தில் தமிழர்களுக்குரிய நியாயமான தீர்வு கிடைக்க துணைநின்றேனும் இனியாவது தமது கடந்த காலப் பாவங்களை கழுவ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 February, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.