CIDயில் முறைப்பாடு! கைது செய்யப்படுவாரா லொஹான் ரத்வத்த?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுதேஷ் நந்திமால் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக இதுவரை முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு பதிவு செய்யும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக எவரேனும் முறைப்பாடு பதிவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பதவி விலகிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட வைத்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமைக்காக கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.