கோட்டாபயவினால் பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த சஜித் அணியில் இணைந்தாரா?
ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். நாம் இணைந்து பணியாற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் (S.M Marikkar) அழைப்பு விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நீக்கப்பட்ட நிலையில் அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இது ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிக்கு, மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் உரிமை இருக்க வேண்டும். அந்தவகையில் மக்களின் குரலாகவே சுசில் பிரேமஜயந்தவும் ஒலித்தார்.
அதற்காக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனநாயகம் இல்லாத, அடக்குமுறை தலைவிரித்தாடும், மக்களின் மன நிலையை புரிந்துகொள்ளாத கட்சியில் இனியும் இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தை மற்றும் மக்களை நேசிக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது எனவேதான் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.