ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு அமர்த்திய விமல் அணி மன்னிப்பு கோரவேண்டும்
ஸ்ரீலங்காவில் மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கு அமர்த்த நடவடிக்கை எடுத்தமையானது பிழையான தீர்மானம் என்பதை உணர்ந்துகொண்டு விமல் அணியினர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.
நாட்டை மூடும்படி கடிதம் அனுப்பிய விமல் அணியினர், நல்லாட்சி காலத்திலும் அமெரிக்காவின் சூழ்ச்சி இடம்பெறுவதாகவே கூச்சல் எழுப்பிவந்தார்கள். கூகுள், முகநூல் என்பவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும், அமெரிக்காவின் சூழ்ச்சி இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்கள்.
எம்.பி.சி ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அவிசாவளையிலிருந்து இரத்தினபுரிக்கு அமெரிக்கப் படையினர் செல்வதற்காக வீதி அகலமாக்கப்படுவதாகவும் கூறினார்கள். சூழ்ச்சி என்று கூறி மக்களின் உணர்வுகளை பிழையாகத் தூண்டிவிட்டனர். விகாரைகள் கைமீறிப்போகலாம் என்றும் குறிப்பிட்டார்கள்.
எனினும் அவர்கள் சொன்ன சூழ்ச்சி பிரசாரமானது இன்று அவர்களுக்கே படுகுழியாவிட்டது. பிரதான பிரச்சினையாக, ராஜபக்ச குடும்பம் மீது உள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை அநாகரிக தர்மபாலவின் அவதாரம் என பல்வேறு எடுத்துக்காட்டுகளையும் உதாரணங்களையும் கூறி புகழ்ந்தார்கள்.
இந்த நிலையில் அவர்கள் செய்த பிழைகளுக்காக விமல் அணியினர் நாட்டு மக்கள் முன்பாக மன்னிப்பு கோர வேண்டும். ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு அமர்த்த பாடுபட்டமை பிழை என்பதை உணரவேண்டும்.
அதேவேளை, நாட்டில் இன்று சரியான முறையில் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி நாடு முடக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் முதலில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.