சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவையாக நிகழ்ந்த சம்பவம் - லொஹான் தொடர்பில் அமைச்சர் புகழாரம்
தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்திய சம்பவத்தையடுத்துப் பதவி விலகிய சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக விசாரணை இடம்பெற்றாலும், அவர் பதவிவிலகியமை மிகச்சிறந்த முன்னுதாரணம் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.
எனினும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடனடியாக பதவிவிலகியதை சிறிலங்கா அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அவருக்கெதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டு 24 மணிநேரம் கடந்துள்ள நிலையிலும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் லொஹானுக்கு எதிராக விசாரணை இடம்பெற்றாலும் பதவியிலிருந்து விலகியமை சிறந்த முன்னுதாரணம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த நிலையில், பெருந்தெருக்கள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் அந்தக் கருத்தை இன்று வெளியிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
உண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவியிலிருந்து விலகியமை சிறந்த உதாரணமாகும். சிறிலங்கா வரலாற்றில் முதற்தடவையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகளில் குற்றச்சாட்டை எதிர்கொண்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகினார்கள் ஆனால் நாட்டில் அவ்வாறு இடம்பெறுவதில்லை என விமர்சித்தார்கள்.
இன்று அப்படியான சம்பவம் இடம்பெறுகையில் அதற்கும் அப்பாற்பட்ட விசாரணையை நடத்தும்படி கோருகின்றார்கள். எனினும் லொஹான் ரத்வத்த பிழை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். அது மிகவும் சிறந்த முன்னுதாரணமாகும்.
எமது நாட்டின் மத்திய வங்கியை கொள்ளையிட்டவர்கள் பதவிவிலகவில்லை தானே. ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற சிறந்த முன்னுதாரணமாக லொஹான் ரத்வத்த பதவிவிலகலைப் பார்க்கின்றேன். அரசாங்கத்தின் விசாரணை இடம்பெறுவதற்கு முன்னர் நாம் எதனையும் கூறமுடியாது.
எவ்வாறாயினும், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் ஆகவே அதற்கமைய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் எனவும், எவரும் இந்த விடயத்தில் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சர்வதேச தரப்பு எமக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எம்மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இந்த சூழலில் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுவது மோசாமான நிலை எனவும் அவர் கூறினார்.