களனி ஆற்றில் குதித்த பெண்:உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவல்துறையினர்
களனி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்ணை கடுவலை காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து பலத்த நீரோட்டம் இருந்த வேளையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்விளக்கு வெளிச்சத்தில் தேடுதல்
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றிரவு 8 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் களனி ஆற்றில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்படுவதாக 119 அவசர இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதன்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடுவலை காவல் நிலைய கட்டளைத் தளபதி தலைமையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மின்விளக்கு வெளிச்சத்தில் நீரோட்டத்தில் பெண் வருவதை அவதானித்துள்ளனர்.
உயிரை மாய்க்க முயற்சி
தொடர்ந்து கயிற்றின் உதவியுடன் ஆற்றில் இறங்கி உயிரை பணயம் வைத்து பலத்த முயற்சிகளை மேற்கொண்டு அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட பெண் உடனடியாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பெண் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் களனி ஆற்றில் குதித்த நிலையில், சுமார் 9 கிலோமீற்றர் தூரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |