நிலவும் சீரற்ற காலநிலை: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை (Badulla), கண்டி (Kandy) , மாத்தறை (Matara), நுவரெலியா, காலி (Galle) , களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
பெண் பலி
இதேவேளை, பண்டாரவளை (Bandarawela) பகுதியில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த மரணமானது, இன்றையதினம் (26) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சீரற்ற காலநிலை
மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுவதால் இந்த வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளைக்கு செல்லும் தொடருந்துகள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways - Sri Lanka) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக மழை பெய்து வருவதுடன் தாழ் நில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கந்தபளை பிரதேசத்தில் கல்பாலம பிரதேசம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியின் தாழ்வான நிலங்களில் அமைந்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மரக்கறி பயிர்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து தடை
அத்தோடு, பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ - நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன், கந்தப்பளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது.
சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
குறிப்பாக உடப்புசல்லாவ , இராகலை , கந்தப்பளை நகரில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்தோடு, நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மற்றும் விக்டோரியா பூங்கா என்பன நீரில் மூழ்கியுள்ளதோடு, அதன் அருகில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நுவரெலியா பிரதேசத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற வெள்ளம் சூழ்ந்த கந்தபளை மாணவர்களை பிரதேசத்திலுள்ள கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |