வவுனியாவில் வான் பாயும் நூற்றுக்கணக்கான குளங்கள்
புதிய இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்துகாணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர்நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மேலதிக நீர் வெளியேறி வருகின்றது
இந்நிலையில் வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று அதிகாலை முதல் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது.
இதேவேளை நேற்று மாலை வரை மாவட்டத்தின் 120 ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டிமேலதிக நீர் வெளியேறிவருவதுடன்,அநேகமான குளங்களில் 90சதவீதமானஅளவு நீர் நிறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
தொடர் மழை காரணமாக வவுனியாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்ள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் நேற்று (25) முதல் பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியாவில் பல குளங்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில் பேராறு நீர்ததேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையினாலேயே வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வான்கதவுகள் திறப்பு
இதனால் இதற்கு கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஒமந்தை, பாலமோட்டையில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் அணைக்கட்டில் உடைப்பெடுத்தமையால் இக்குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் நிலம் நீரால் சூழப்பட்டுள்ளதுடன், இப்பகுதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மேலும் இதனை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கையினை கமக்கார அமைப்பு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



