யாழில் மாணவனை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்: விபத்தை ஏற்படுத்திய பெண் தப்பியோட்டம்
யாழில் (Jaffna) பாடசாலை மாணவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று (22.04.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தரம் 7 இல் கல்விபயிலும் 12 வயதுடைய மாணவன் நேற்று வழமை போன்று தனது துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
விபத்துச் சம்பவம்
பாடசாலையின் அருகாமையில் குறித்த சிறுவன் சென்ற நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் தன்னை மோதியதில் தான் துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் விழுந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விபத்தை ஏற்படுத்திய பெண் விபத்தில் காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தன்னை பொருட்படுத்தாது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
மேலும், குறித்த விபத்தில் மாணவனின் கை முறிந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் காவல்துறையினர் வீதிக் கடமையில் வழமையாக இருந்துவரும் நிலையில் சில நாட்களாக அந்த செயற்பாடுகள் இல்லாதுள்ளமையை அவதானிக்க முடிவதாக மாணவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்தி - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
