கொழும்பில் இரத்தக்கறையுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் இரத்தக்கறையுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று (15) இரவு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை கிடைத்த தகவலுக்கு அமைய குருந்துவத்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 75 வயது என்பதுடன் கணவரின் மரணத்திற்குப் பின்னர் அவர் தனியாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் வீட்டில் மின்சாரத்தினால் தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உபகரணத்தின் மின் வடம் அறுந்து காணப்பட்டுள்ளதுடன் வீட்டிலுள்ள பிரதான மின் ஆளியும் ஆஃப் செய்யப்பட்டு காணப்பட்டுள்ளது.
இதனால் சடலமாக மீட்கப்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        