சர்வதேச ரத்தின கண்காட்சியில் உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல்
இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
டுபாய்க்கு அனுப்புவதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று குறித்த நீலக்கல்லை அதிகாரிகள் கொண்டு சென்றனர் .
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் நடைபெறும் சர்வதேச ரத்தினம் மற்றும் நகை கண்காட்சியில் இந்த நட்சத்திர நீலக்கல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி இரத்தினபுரி கஹாவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தனது வீட்டு முற்றத்தில் கிணறு தோண்டிய வேலையாட்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக மாணிக்க வியாபாரி ஒருவர் அப்போது தெரிவித்தார்.
இந்த நட்சத்திர நீலக்கல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் காரட் எடை கொண்டது மற்றும் "செரண்டிபிட்டி சபையர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று நிபுணர்கள் முன்னதாக கூறியிருந்தனர்.