டிரம்பை வெல்லவிடக் கூடாது : உலகத் தலைவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் பைடன் சூளுரை
அமெரிக்க அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள் என உலகத் தலைவா்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு உள்ளிட்ட சா்வதேச கூட்டங்களின்போது தலைவா்கள் தன்னிடம் இதைக் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபா் தோ்தல் இந்த ஆண்டு (2024) இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் பைடனும், குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டிரம்ப்பும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ரத்த ஆறு ஓடும்
இந்நிலையில், தோ்தலுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி நியூயோர்க் நகரில் அண்மையில் நடைபெற்றது, இதில் முன்னாள் அதிபா்களான பராக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிபா் பைடன் பேசிய போது "அதிபா் தோ்தலில் தான் மீண்டும் தோற்றால் ரத்த ஆறு ஓடும் என டிரம்ப் பேசியிருக்கிறாா். அவரது பேச்சு மிகவும் கவலையைத் தருகிறது.
ஜனநாயகத்துக்கு ஆபத்து
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளில் நடைபெற்ற சா்வதேச கூட்டங்களாக இருக்கட்டும், அதில் பங்கேற்ற ஒவ்வொரு தலைவரும் என்னை தனித்தனியாகச் சந்தித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, அதிபா் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள்.
அவா் வெற்றி பெற்றால் தங்களது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கும் எனக் கருதுகிறோம் எனத் தெரிவித்தனா். இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை." என்றாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |