இலங்கை முழுதும் பல அபாயகரமான பகுதிகள் உருவானது - மோசமான நிலை ஏற்படும்
கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயமிக்க பல பகுதிகள் உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
அதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகமான மரணங்களும் பதிவாகக்கூடும். உலகில் இவ்வாறே நடைபெற்றது.
மொத்த தொற்றாளர்கள் மற்றும் தற்போதுள்ள தொற்றாளர்களை அவதானித்தால் டிசம்பர் மாதத்தின் பின்னர் மிகவும் வேகமாக வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இன்னும் இரண்டு மாதங்கள் இவ்வாறு தொடர்ந்தால் மோசமான நிலை ஏற்படும். உலகில் துரிதமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த ஏனைய நாடுகளில் பாரதூரமான பிரதிபலன்களே கிடைத்திருந்தன. மிகவும் குறுகியதொரு சுகாதார கட்டமைப்பே எமது நாட்டில் உள்ளது.
அதனால்தான் இவ்வளவுதூரம் நாம் எச்சரிக்கை விடுக்கிறோம். நாடு முழுவதும் அவதானமிக்கதான பல பகுதிகள் தற்போதைய சூழலில் உருவாகிவிட்டன. ஒரு நாடாக கொவிட்19 ஒழிப்பு விடயத்தில் தோல்விக்கண்டுள்ளோம்.
கடந்த டிசம்பர் மாதம் மேல்மாகாணத்தை மாத்திரம் மையப்படுத்தியிருந்த அவதானமிக்கப் பகுதிகள் தற்போது நாட்டின் பல பகுதிகளில் உருவாகியுள்ளன என்றார்.