எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி உள்ளிட்ட 13 பேரிடம் சி.ஐ.டி வாக்குமூலம்!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீக்கிரையான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி உள்ளிட்ட 13 பேரிடம் ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் ஊழியர்கள் 25 பேருக்கும் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலின் பிரதான பொறியியலாளரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற நாளாந்த ஊடக சந்திப்பின் போதே அஜித் ரோஹண இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தியது. கப்பலின் முதன்மை பொறியியலாளர், அதேபோல் பிரதி முதன்மை பொறியியலாளர், மாலுமி உள்ளிட்ட மொத்தமாக 13 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துறைமுக பொறுப்பதிகாரி மற்றும் சமுத்திர சூழலியல் அதிகாரசபையின் அதிகாரியின் வாக்கு மூலமும் இதில் உள்ளடங்கும். வர்த்தக் கப்பல் செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பலின் ஊழியர்கள் 25 பேரும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 27 ஆம் திகதி கப்பல், சிங்கபூர் நோக்கி புறப்படவிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைவிட இந்த கப்பலின் மாலுமியால் சிங்பூர் நிறுவனத்துடனும், இலங்கையின் அந்த நிறுவனத்தின் பிரதிநிதியுடனும் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனைவிட கப்பலின் பிரதான அதிகாரியிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த விதம் குறித்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கப்பலை இலங்கை இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகமும் ஆய்வு செய்யவுள்ளது. இதற்கென கடற்படையின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர்ா மேலும் தெரிவித்துள்ளார்.