எக்பிரஸ் பேர்ள்- ஸ்ரீலங்கா பிரதிநிதியை கைது செய்ய உத்தரவு; தலைமறைவான நபர்!
கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பற்றி எரிந்த எக்பிரஸ் பேர்ள் கப்பலின் வீ.டி.ஆர் பதிவுக் கருவியில் உள்ள விடயங்களை விசாரணை செய்ய, அதனை உற்பத்தி செய்த நிறுவனத்தின் உதவி தேவையென ஸ்ரீலங்கா அரச பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கப்பலின் ஸ்ரீலங்கா பிரதிநிதி தற்போது தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடந்த மே 20ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்கிற வெளிநாட்டுக் கப்பலில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து குறித்த கப்பல் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. தொடர்ந்தும் அந்தக் கப்பல் தென்னிலங்கை கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பின்புறத்தின் அரைவாசிப்பகுதி கடலில் மூழ்கியுள்ளது.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஸ்ரீலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தனித்தனியான விசாரணைகளை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பதிவுக் கருதியை கடந்த 05ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அதனுள் பதிவாகியிருக்கின்ற தரவுகள் மற்றும் தகவல்களை வைத்து மேலதிக விசாரணைகளை செய்வதற்காக தற்போது அந்தக் கருவி ஸ்ரீலங்கா அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நிறுவனத்துடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா அரச பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்பிலிருந்த ஸ்ரீலங்காவிலுள்ள தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் விரைவில் விசாரணை செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்புக் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் ஸ்ரீலங்காப் பிரதிநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் குற்ற விசாரணைப்பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
குறித்த பிரிதிநியைக் கைது செய்வதற்காக குற்ற விசாரணைப்பிரிவின் விசேட குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.
சந்தேக நபருடைய அலுவலகம் மற்றும் இல்லம் என்பன தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர் அந்த இடங்களில் இல்லை என்றும் ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.