யான் ஓயா திட்ட விரிவாக்கம்! அரசாங்கம் குகதாசன் ஆலோசனை
யான் ஓயா திட்டத்தினை விரிவுபடுத்துவதின் மூலம், 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளலாம் என்பதோடு நாட்டின் அரிசி உற்பத்தியினையும் அதிகரிக்கலாம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமானது கடந்த ஆண்டு இந்த ஆற்றுக்கு குறுக்கே தற்காலிகமாக மண் சாக்கு அணைகட்டி 300 ஏக்கரில் விவசாயம் செய்ய நீர் வழங்கியது எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
மறுசீரமைப்பு
“பதவியாவில் உள்ள ஜெயந்திவெவ குளத்தில் இருந்து வரும் கழிவு நீரானது வண்ணான்துறை ஆறு, குண்டாறு ஆகியவற்றின் ஊடாக ஓடி கடலில் வீணாகக் கலக்கின்றது.
வண்ணான்துறை ஆற்றின் குறுக்கே ஓர் அணைக்கட்டு உள்ளது. இதனை மறுசீரமைத்தால் தென்னமரவடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 300 ஏக்கர் நெற்செய்கைக்கு நீர் வழங்கலாம்.
இதன் மூலம் அரிசி உற்பத்தியினைப் பெருக்கலாம். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் நீலபணிக்கன் குளமானது திரியாய் வட்டாரத்தில் வதியும் மக்களுக்கு உரித்தாக உள்ளது.
மீன் பிடிக்கும் உரிமை
எனினும் மேற்படி குளத்தில் மீன் பிடிக்கும் உரிமை திரியாய் நன்னீர் மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்காமல் வேறோர் ஊரில் உள்ள சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி உரிமை திரியாய் நன்னீர் மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீதி வேலைத்திட்டம், PSDG வேலைத்திட்டம் என்பவற்றின் கீழ் குச்சவெளி பிரதேச சபைப் பிரிவில் 12 கிலோமீட்டர் வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன .
இதற்கு நன்றி. எனினும் குச்சவெளி பிரதேச சபை பிரிவில் மற்ற எல்லா வட்டாரங்களில் இருந்தும் வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் திரியாய் வட்டாரத்தில் இருந்து ஒரு வீதியும் தெரிவு செய்யப்படவில்லை” என கூறியுள்ளார்.

