நான் குற்றமற்றவன்...! நீதிமன்றக் கூண்டிலிருந்து முழங்கிய யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணைகளைத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இன்று (14-05-2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றமற்றவர்
இதன்போது, தாம் குற்றமற்றவர் என யோஷித ராஜபக்ச நீதிமன்றக் கூண்டிலிருந்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள "சதித் திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்துப் பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க நிராகரித்தார்.

அந்த ஆட்சேபனைக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனத் தீர்ப்பளித்த நீதவான், குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்ட பின்னர் யோஷித ராஜபக்ச தாம் குற்றமற்றவர் எனப் பதிலளித்துள்ளார்.
பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இந்த வழக்கு இனிவரும் நாட்களில் மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |