காவல் நிலையத்தில் உயிரிழந்த நிமேஷ் சத்சர: நீதிமன்றத்தால் வழக்கில் புதிய திருப்பம்
வெலிக்கடை (Welikada) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது பதுளை நீதவான் நுஜித் டி சில்வா முன்னிலையில் இன்று(23.04.2025) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி குறித்த இளைஞனின் உடலைத் தோண்டி எடுத்து மூன்று சிறப்பு வைத்தியர்கள் கொண்ட குழுவால் முழுமையான பிரேதப் பரிசோதனை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்திய அதிகாரிகளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெற்றோரின் முறைப்பாடு
தங்களுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை கவனத்திற்கெடுத்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வெலிக்கடை காவல்துறையினரால் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி காலையில் உயிரிழந்தார்.
பதுளை, மீகஹகிவுலயைச் சேர்ந்த நிமேஷ் சத்சர என்ற 25 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
அத்துடன், இளைஞனின் மரணம் தொடர்பில் வெலிக்கடை காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரி, காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
