ஒரு போதும் பின்வாங்கமாட்டேன் -புரட்சிகரமான மாற்றத்திற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும் -கோட்டாபய அழைப்பு
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டபடி, புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாகத் தான் ஏற்படுத்துவதாக, அரச தலைவர் கோட்டாபய(Gotabaya) தெரிவித்தார்.
புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அரச தலைவர் குறிப்பிட்டார்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அரச தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் ஏனைய நாடுகளைப் போன்று, இலங்கையும் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தின் முன்னே அடையாளம் காணமுடியாத தொற்றுநோயுடன், பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அன்று தாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், அதில் எந்தவொரு குறையையும் வைக்காது, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக அரச தலைவர் தெரிவித்தார். கொவிட் நோய்த்தொற்று காரணமாக சுற்றுலா கைத்தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்மூலம் இழக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழில்கள், கிட்டத்தட்ட 03 மில்லியன்கள் ஆகும். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டதோடு, உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டும் வரையான வியாபாரிகள் வரை அனைவரதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
அத்துடன், ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியுடனும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறித்த தினத்தில் ஊதியம் வழங்கப்பட்டது. 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் தவணைகளை உரியவாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டன. நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் பாரிய பொருளாதார சிக்கல்களுடனேயே நிறைவேற்றியதாகவும் அரச தலைவர்இங்கு நினைவுகூர்ந்தார்.
சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அரச தலைவர்குறிப்பிட்டார். பயறு, கௌபி, உழுந்து, மஞ்சள் உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.
கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அரச தலைவர் இங்கு தெளிவுபடுத்தினார்.
இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட அரச தலைவர் , விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு அரச தலைவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.