பூதாகரமாக வெடித்துள்ள யுகதனவி ஒப்பந்தம் - கோட்டாபய அரசுக்கு வலுக்கும் நெருக்கடி
அமெரிக்க நிறுவனமொன்றுடன் செய்து கொள்ளப்பட்ட யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாவிடில் அமைச்சுப்பதவியையும் துறக்கத் தயாரென அமைச்சர் உதய கம்மன்பில் அறிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தத்துக்கு எதிராக அமைச்சர்களான, வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), உதய கம்மன்பில(Udaya gamanpila), விமல் வீரவன்ச(Wimal Weerawansa) உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகள் ஓரணியில் திரண்டு இன்றைய தினம் மக்களின் பேரவை என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தன.
இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க நிறுவனத்திற்கு விலை மனுக்கோரல் இன்றி ஒப்பந்தத்தை வழங்குவதற்கு யாரோ இணக்கம் வெளியிட்டுள்ளார்கள். அந்த இணக்கத்தின் காரணமாகவே இன்று அமெரிக்க நிறுவனத்திற்கு யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெளிநாடு ஒன்றுக்கு செல்வது மிக ஆபத்தானது, அதனைவிட ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு வழங்கப்படுவது இன்னும் ஆபத்தானது.
விலைமனு கோரல் ஊடாக இந்த செயற்றிட்டத்தில் இணைந்து செயற்பட முன்வந்த ஸ்ரீலங்காவுடன் என்றும் நட்புடன் செயற்படும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு வாய்ப்பினை வழங்காமல், ஸ்ரீலங்காவிற்கு எதிராக செயற்படும், விலை மனுக்கோரலில் பங்கேற்காத அமெரிக்காவிற்கு இதனை வழங்குவதன் ஊடாக நாம் எதிர்ப்பினை சம்பாதிக்க வேண்டியேற்படும்.
நண்பனை எதிரியாக்கும் விடயமே இது. இந்த விடயம் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், அன்னை பூமிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
ஆகவே இந்த செயற்றிட்டத்தை தடுக்க வேண்டும். ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் இதனை வழங்குவதாக தெரிவித்திருந்தோம்.
எனினும் அதனை நாம் செய்யவில்லை. இது இராஜதந்திர பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகவே அமைச்சுப் பதவியை மாத்திரமல்ல, அதற்காக செய்யக்கூடிய எந்தவொரு தியாகத்தையும் செய்யவும் நாம் தயார் என அமெரிக்க முகவருக்கு தெரிவிப்பதோடு, நாட்டை பாதுகாக்க எம்முடன் இணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.