யுக்திய நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரியை தாக்கிய போதைப்பொருள் வியாபாரி
யுக்திய நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவரின் தலையில் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்ற பிரதான போதைப்பொருள் வியாபாரி உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட காவல் நிலைய கட்டளைத் தளபதி பிரதான காவல்துறை பரிசோதகர் கபில பண்டார தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
அதன்போது, காயமடைந்த சமரஜீவ என்ற காவல்துறை அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் செல்ல முயன்ற மாளிகாவத்த அசித போதை பொருள் வியாபாரியிடமிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட உயிர் வெடிகுண்டு மற்றும் 11,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அதேவேளை, காவல்துறை அதிகாரியொருவர் குறித்த சந்தேகநபரை துரத்திப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், 4 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் பிரதான ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் உட்பட 47 சந்தேகநபர்களும், ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 06 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |