வசந்த காலத்தை அனுபவிக்க சிறந்த 10 நாடுகள், எவை தெரியுமா?
இளவேனிற்காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 நாடுகள் எவை?, அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
பொதுவாக குளிர்காலத்திற்கும், கோடைக்காலத்திற்கும் இடையில் வரும் காலத்தை இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் (Spring Season) என்று அழைக்கிறார்கள்.
புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மித வெப்பநிலைகளை கொண்ட இடங்களில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், தென் அரைக்கோளத்தில் உள்ள மித வெப்பநிலைகளை கொண்ட இடங்களில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் இந்த வசந்த காலத்தை இனிமையாக அனுபவிக்கலாம்.
அந்த வகையில், இளவேனிற்காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 நாடுகள் எவை?, அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
ஜப்பான்
ஜப்பானில் வசந்த காலம் என்பது மிதமான வெப்பநிலையுடன், தெளிவான வானம் மற்றும் செர்ரி பூக்கள் நிறைந்த ஓர் கண்கவர் காட்சிகளைக் கொண்ட சிறந்த காலமாக பார்க்கப்படுகிறது.
இந்த காலத்தில் தான் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால், மரங்களுக்கு அடியில் பூக்களை ரசித்தவாறு பயணம் செய்யலாம். இதுவே, ஜப்பானை பார்வையிட சிறந்த நேரமாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்த நேரத்தில்தான் வெளிநாட்டினர் முதல் உள்ளூர் வாசிகள் வரை மக்கள் கூட்டம் அலைமோதுவதால், அதிக கூட்ட நெரிசலாக காணப்படுவதோடு, பயணம், தங்குமிடங்கள் மற்றும் உணவின் விலையில் சற்று அதிகரிப்பை காணலாம்.
நெதர்லாந்து
மார்ச், ஏப்ரல் மாதங்களில் துலிப் விழாவின்போது நெதர்லாந்துக்கு செல்வது புதுவிதமான அனுபவத்தைத் தரும். இந்த நேரத்தில், வெப்பநிலை 5°C முதல் 19°C வரை இருக்கும்.
மேலும், இந்த பருவத்தில் துலிப் பூக்கள் மட்டுமின்றி, இன்னும் பல பூக்கள் பூத்துக் குலுங்குவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
பிரான்ஸ்
பாரிஸ் அதன் அழகிய தோட்டங்களுக்காகவும், அதன் இனிமையான வானிலைக்கும் பெயர் பெற்றது. அதிலும், மார்ச் முதல் மே வரை அங்கு வானிலை மிகவும் இனிமையாக இருக்கும்.
விட்டு விட்டு பெய்யும் மழை மற்றும் இதமான வெப்பநிலை உங்களுக்கு சிறப்பான அனுபவத்தையும், புதுவித உணர்வையும் தரலாம். கோடை மாதங்களைவிட கூட்டம் குறைவாகவே இருக்கும் என்பதால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஸ்பெயின்
ஸ்பெயினை, மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் சுற்றிப்பார்ப்பது சிறந்தது.
மிதமான வெப்பநிலை, அழகிய பூக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக இருக்கும் உள்ளிட்ட காரணங்கள் உங்களது பயணத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.
செமனா சாண்டா மற்றும் ஃபெரியா டி அப்ரில் உள்ளிட்ட பல பண்டிகைகளும் இந்த நேரத்தில்தான் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி
ஆண்டின் எந்த நேரமாக இருந்தாலும், விடுமுறைக்கு செல்ல சிறந்த இடங்களில் ஒன்று இத்தாலி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும், வசந்த காலத்தில் இத்தாலியை சுற்றிப் பார்ப்பது உங்களுக்கு இன்னும் புதுவித அனுபவத்தைத் தரலாம். பசுமையான வயல்கள் முதல் பழத்தோட்டங்கள், தாவரங்கள் என அனைத்தும் பூத்துக் குலுங்கும்.
குளிர்ந்த காற்றும், இதமான சூரிய ஒளியும் இனிமையான அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக, இந்தப் பருவத்தில் இத்தாலியின் பிரபலமான ரோம், புளோரன்ஸ் அல்லது நேபிள்ஸ் ஆகிய நகரங்களில் இருந்தாலும் கடற்கரை, கிராமப்புறம் என அனைத்து இடங்களும் ஓர் இனிமைமான அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
சுவிட்சர்லாந்து
பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதியில் சுவிட்சர்லாந்திற்குச் செல்வது சிறந்த அனுபவத்தைத் தரும்.
குறிப்பாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அங்குள்ள மலைப் பிரதேங்கள் பிரம்மிப்பைத் தரும்.
வானிலை லேசானதாகவும், வெப்பநிலை இனிமையாகவும் இருக்கும் இந்த நாட்கள் தெளிவான சீனரி காட்சிகளை வழங்கி உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
கிரீஸ்
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலல்லாமல், கிரீஸ் கடுமையான குளிர்காலம் அல்லது சுட்டெரிக்கும் கோடையால் பாதிக்கப்படுவதில்லை.
ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையுடனும், அதே நேரத்தில் கோடை காலத்துடன் ஒப்பிடும்போது வசந்த காலம் பொதுவாக அமைதியான சூழலுடனும் இருக்கும்.
குறிப்பாக, கிரேக்க தீவுகளான சாண்டோரினி, கிரீட், கோர்பு மற்றும் நக்சோஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
ஆனால் அமைதியான சூழலில் நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், உங்களுக்காகவே பிரத்யேகமான பல சிறிய மற்றும் அமைதியான தீவுகளும் உள்ளன.
தென்னாப்பிரிக்கா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களுள் ஒன்று தென்னாப்பிரிக்கா.
வலுவான டாலர், யூரோ மற்றும் பவுண்டுகள் என கிட்டத்தட்ட எல்லாமே மலிவான விலையில் கிடைக்கும்.
மேலும், சிறந்த ஹோட்டலில் தங்குவதில் இருந்து, சரியான விலையில் சிறந்த உணவை உண்ணுவது வரை அனைத்தும் மலிவாக இருப்பதுடன், பல்வேறு சுற்றுலாத் தலங்களாலும் தென் ஆப்பிரிக்கா பிரபலமாகி இருக்கிறது.
அதிலும், மற்ற பருவங்களில் இருப்பதைவிட வசந்த காலத்தில் குறைவான சுற்றுலாப் பயணிகள் வருவதால், இந்த நேரத்தில் அங்கு செல்வது ஓர் இனிமையான சூழலை தரலாம்.
கிர்கிஸ்தான்
பொதுவாக, கிர்கிஸ்தானில் வசந்த காலம் மிகவும் குறுகிய காலமாகவே இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை திடீரென அதிகமாகவும், திடீரென குறைவாகவும் இருக்கும்.
அதே நேரத்தில் வசந்த காலம் தொடங்கும்போது, பனி உருகத் தொடங்கி, அந்த நீர் கிர்கிஸ் ஆல்பைன் ஏரிகளை நிரப்புவதால் அந்த அழகிய சூழலை பார்த்து ரசிக்கலாம்.
கனடா
கனடாவில் வசந்த காலம் மார்ச் முதல் மே வரை நீடிக்கும். இந்த சூழலில் வெப்பமான வானிலை, இறுகிய பனியை உருக வைக்கிறது.
மற்றும் பூக்கள் பூக்கத் தொடங்கும். குறிப்பாக, அதன் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரையை பார்வையிட இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
அதே நேரத்தில், இடம்பெயரும் பறவைகள் முதல் கரடிகள் வெளியேறுவதுவரை வன விலங்குகளைப் பார்ப்பதற்கும் வசந்த காலம் சிறந்த நேரமாக இருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)