இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை
வஸ்கடுவ ஆடம்பர சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய தம்பதிகளின் பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அடங்கிய பெட்டகம் (லொக்கர்) நேற்றுமுன்தினம் (5) இரவு திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட சொத்துக்களில் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான பவுண்ஸ்கள், வளையல், மோதிரம், கைக்கடிகாரம் மற்றும் பல சொத்துக்கள் உள்ளதாக காவல்துறையில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் வந்த தம்பதி
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்த இந்ததம்பதியினர் குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினமிரவு (5) அவர்கள் தங்கியிருந்த அறையின் ஒரு இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் அறைக்குள் நுழைந்து ஹோட்டல் வழங்கிய பெட்டகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்களுடன், லொக்கரை எடுத்துச் சென்றதாக புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
சம்பவம் தொடர்பில் ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இந்த திருட்டு தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், சந்தேகநபரை மிக விரைவில் கைது செய்ய முடியும் எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை வடக்கு காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தமித் ஜயதிலகவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
