கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்
கனடாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து, ஒரு அரசு சாரா அமைப்பின் (NGO) பிரதிநிதி எனக்கூறி 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குச்சவேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதான இந்த சந்தேக நபர், கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து இந்த மோசடியைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பதிவாகும் முறைப்பாடுகள்
சந்தேக நபருக்கு எதிராக இதுவரை 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் 4 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை இழந்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், மேலும் பல முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதால், இந்த மோசடியுடன் தொடர்புடைய மொத்தத் தொகை 10 மில்லியன் ரூபாயைத் தாண்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரைப் பிடிக்க இதற்கு முன்னர் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்துள்ளார்.
ஏற்கனவே இருந்த வழக்குகள்
இந்நிலையில், காவல்துறை விசேட பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, கடந்த மே 19 அன்று குச்சவேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த சந்தேக நபருக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகள் நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மே 20 அன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, அவரை மே 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |