சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது! (படங்கள்)
சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் எடுபட்ட 12 பேர் சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் வைத்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் (29) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட பன்னிரண்டு பேரும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கற்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் பயன்படுத்திய நான்கு படகுகள், பிடிக்கப்பட்ட 1,670 எண்ணிக்கையான கடலட்டைகள், அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என பல்வேறு பொருட்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தவிரவும், கைது செய்யப்பட்ட 12 பேர், கடலட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள், படகுகள் அனைத்தையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.