இலங்கை மீது இந்திரா காந்தியின் படையெடுப்பு திட்டம் கசிந்ததின் பின்னணி..!
இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறை செய்யாது போனால், இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியா திறமையற்றது என்ற எண்ணம் உருவாகும் என இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய சட்டத்தரணியும் செய்தியாளருமான புழல் காந்தி, இணையத்தளத்தில் எழுதிய அரசியல் கட்டுரையிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற கூற்றையும் அது மறைக்கக்கூடும் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவை இந்தியா வெல்ல வேண்டும்

எனவே தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டுமெனில் 13ஆவது திருத்தத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சிறிலங்காவை இந்தியா வெல்ல வேண்டும்.
இதுவே ஒரு நூற்றாண்டு கால இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வழி வகுக்கும் என்றும் இந்திய இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இலங்கை மீது படையெடுத்து இலங்கையின் முக்கியமான விமானத் தளங்களைக் கைப்பற்றுவதற்கான இரகசியத் திட்டங்களை வைத்திருந்தார்.
கசிந்த திட்டம்

எனினும் படையெடுப்பு உத்தி உள்ளிட்ட இரகசியத் திட்டம் கசிந்ததால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.
இந்தநிலையில், இந்திரா காந்தியின் படுகொலை, இந்த படையெடுப்புத் திட்டத்தை மூடிமறைத்தது என்ற தகவலையும் கட்டுரையாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் அந்த பொறுப்பை ஏற்று ராஜீவ் காந்தி 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழ் 13ஆவது அரசியலமைப்புக்கு வழிவகுத்தார் என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை

இலங்கைப் பிரச்சினை பிரதானமாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான மோதலாகும் என கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அநுராதபுரத்தின் சைவத் தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனுடன் புத்த மதத்தைத் தழுவிய சைவத் தமிழர்கள், சிறுபான்மை சைவத் தமிழர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மோதலே, தற்போது நிலவுவதாக இந்திய சட்டத்தரணியும் செய்தியாளருமான புழல் காந்தி தமது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.