வன்முறையால் உருகுலைந்த நேபாளம்: தப்பியோடிய ஆயிரக்கணக்கான கைதிகள்
நேபாள (Nepal) சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடியள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த நான்காம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்தது.
இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த எட்டாம் திகதி கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டம்
சமூக வலைத்தள தடையை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியது.
போராட்டத்தில் 19 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் பாதுகாப்பு படையினர் உள்பட 300 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தலைநகரின் பல பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் சமூக வலைத்தளங்கள் மீதான தடையும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
கைதிகள் தப்பியோட்டம்
இருப்பினும், போராட்டம் பல இடங்களில் வெடித்த நிலையில், கலவரத்திற்கு மத்தியில் நேபாளத்தில் உள்ள 25 இற்கும் மேற்பட்ட சிறைகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கைதிகள் தப்ப முயன்றபோது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய கைதிகளில் வெகு சிலரே காவல்துறையினரால் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தாங்களாகவே சரணடைந்துள்ளதுடன் கைதிகளை உடனடியாக தேடிப்பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நேபாள அரசின் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
