கொழும்பில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு : அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
தெஹிவளை, போதிவத்த பகுதியில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், அவர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலதிக விசாரணை
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி தெஹிவளைப் பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தெஹிவளை வனரத்ன குவாட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் இரண்டு துப்பாக்கிதாரிகளில் ஒருவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சந்தேகநபர் இன்று (24) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முனிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |