கேபிள் கார் அறுந்து விபத்து: 23 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட 174 பேர்
துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான நிலையில் 23 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 174 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது.
இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் பயணம் செய்வதோடு 2010 அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
ஒருவர் பலி
இந்நிலையில், நேற்று(13) கேபிள் கார் ஒன்று அறுந்து விழுந்து பாறை மீது மோதியதில் ஒருவர் பலியானதுடன் ஏழு பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விபத்தால் கேபிள் கார்களை இயக்க முடியாமல் இருந்தமையினால் மலைக்கு மேல் கேபிள் கார்களில் 174 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.
மீட்புப்பணி
அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் இதற்காக மீட்புக்குழுவினர் 600 பேரும் மற்றும் 10 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரவு முழுவதும் மீட்புப்பணி நடந்த நிலையில் சுமார் 23 மணி நேரத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |