கட்டுநாயக்கவில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் கைது
சட்டவிரோத ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைபெருளின் மொத்த பெறுமதி 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (09.09.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல கோடி பெறுமதியான போதைப்பொருள்
இவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, காற்று உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்ட ஐந்து பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |