யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்துரொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் (20.2.2025) வியாழக்கிழமை இடம்பெற்ற போது மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
மலசல கூடத்தில் மின் மோட்டார்
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டிருந்தனர்
இதனையடுத்து சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
மற்றும் மலசல கூடத்தில் மின் மோட்டாரை இயக்கிய உரிமையாளருக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடையை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு நீதிபதி கட்டளையிட்டுள்ளார்
இந்நிலையில், நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
