இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : அதிபர் ரணில் தெரிவிப்பு!
இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அடுத்த ஆண்டு (2024) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது மாத்திரமல்லாது இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மின்சார பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (13) நாடாளுமன்றில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே அதிபர் இதனைத் தெரிவித்தார்.
பல்போக்குவரத்து மையத் திட்டம்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"கண்டி நகரின் வாகன மற்றும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க புகையிரத, பேருந்து மற்றும் பிற போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உலக வங்கியின் கடனுதவியுடன் கண்டி பல்போக்குவரத்து மையத் திட்டம் எதிர்வரும் 2024 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.
இந்த போக்குவரத்து மையத்திட்டத்திற்காக சாலைகளை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
புனரமைப்புப் பணிகள்
மேலும் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளை ரயில்வே திணைக்களம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் நிறைவு செய்யும்.
அதுமாத்திரமல்லாமல் மிஹிந்தலை நிலைய வளாகத்தில் தனியார் துறையின் நிதியுதவியுடன் போக்குவரத்து, பொருளாதார, கொள்கலன் மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய பாரிய நகர தளம் ஒன்றினை அமைப்பதற்கும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது." என தெரிவித்தார்.